352. 123 ஒப்பந்தமும் பிரதமரின் புளுகும்
அணுகுண்டு பரிசோதனை செய்வதற்கான உரிமையை இழந்து விடவில்லை என்ற பிரதமர் மன்மோகன்சிங்கின் பாராளுமன்ற உத்தரவாதம் பச்சைப் புளுகு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஒப்பந்தத்தின் வாயிலாக எந்த சலுகையும் கிடைக்காது, இந்தியா எதுவும் செய்ய முடியாது என்பது தான்
நிதர்சனமான உண்மை!
மெத்தப் படித்த, நேர்மையில் நம்பிக்கையுள்ள நமது பிரதமர் இப்படிப் புளுகியது ஆச்சரியமாக உள்ளது.
அமெரிக்காவுக்கு இப்படி வால் பிடிக்க வேண்டிய அவசியம் ஏன் அவருக்கு ஏற்பட்டது என்பது புதிராகவே
உள்ளது. மேலும், AECயின் (Atomic Energy Commission) முன்னாள் தலைவரான திரு.கோபாலகிருஷ்ணன், இந்த ஒப்பந்தத்தால், சாதகங்களை விட பாதகமே அதிகம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தியாவின் அணு சக்தி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், 2020-இல் இந்தியா எனெர்ஜி தன்னிறைவுக்கு வெகு விரைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். AECயின் ஒரு ஆராய்ச்சி அறிக்கையும் இதை தெளிவுபடுத்துகிறது. ஆனால், தற்போதைய AEC தலைவரும், பிரதமரின் அறிவியல் ஆலோசகரும், உண்மைகளை மறைத்து அரசுக்கு ஜால்ரா போடுவதையும் அவர் சாடியுள்ளார்.
அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறோம் என இடதுசாரி கட்சிகளும் தொடர்ந்து கூறி
வருவதால், கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, மறைமுக சமரச முயற்சிகள் நிடந்து வருகின்றன. இருப்பினும், ஒப்பந்தத்தால்
ஏற்பட்ட அதிருப்தி, மன்மோகன் சிங் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா உடனான
அணுசக்தி ஒப்பந்தத்தை, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகள்
கடுமையாக எதிர்த்து வருகின்றன. "ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று பிரதமர் மன்மோகன்
சிங்கும், "எங்கள் ஆதரவினால் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அரசு தொடர்ந்து செயல்பட
வேண்டுமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும்' என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்தும் மாறி மாறி கூறியது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இடதுசாரி தனது ஆதரவை விலக்கிக் கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில்,
கம்யூனிஸ்ட்கள் பல்டி அடிப்பதில் வல்லவர்கள். காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்து, பிஜேபி
ஆட்சிக்கு வந்து விடக் கூடிய சாத்தியம் குறித்து அவர்களுக்கு அச்சமிருக்கிறது! 123 ஒப்பந்தம் தற்போது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு கையெழுத்தானாலும், அடுத்த தேர்தலில் மற்றொரு அரசு அமைந்து,
அவ்வரசு இந்த ஒப்பந்தத்தை கான்ஸல் செய்தால் (செய்ய முடியுமா?) நிலைமை என்னவாகும் என்பதை
யாராவது விளக்கினால் நல்லது.
எ.அ.பாலா